அண்ணாநகர்: கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்தில் நேற்று முன்தினம் ஏறிய வாலிபர், டிக்கெட் எடுத்துவிட்டு, ‘ஜன்னல் ஓரமாக சீட் வேண்டும்’ என்று நடத்துனரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ஜன்னல் ஒரமாக சீட் ஏதும் காலியாக இல்லை, என்று கூறியுள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, டிராவல்ஸ் நிறுவன ஊழியர் பாட்ஷா (41) அங்கு வந்து, தகராறு செய்த பயணியை சமாதானம் செய்துள்ளார்.
அப்போது, ஆத்திரமடைந்த பயணி, பாட்ஷாவை சரமாரியாக தாக்கி, பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் பாட்ஷாவின் இடுப்பு எலும்பு முறிந்து, வலியால் துடித்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், கோயம்பேடு போலீசார், அந்த பயணியை பிடித்து விசாரித்த போது, கோயம்பேடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (39) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.