Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காலி மனை உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு : தாம்பரம் மாநகராட்சி அதிரடி

தாம்பரம், செப்.13: தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. 87.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாம்பரம் மாநகராட்சியில், 5 மண்டலங்கள் மற்றும் 70 வார்டுகள் உள்ளன. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர், சிடிஓ காலனி, கன்னடபாளையம், டிடிகே நகர், சமத்துவ பெரியார் நகர், லட்சுமி நகர், முடிச்சூர் சாலை, செம்பாக்கம், சிட்லபாக்கம், பம்மல், அனகபுத்தூர், ராதா நகர், கீழ்கட்டளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் மழை காலத்தின் போது குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்வதால், உடமைகளை இழந்து மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வாக, இந்த ஆண்டு தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சாலைகள் மற்றும் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.மேலும், மழைநீர் வடிகால்களில் படிந்துள்ள கசடுகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் கனமழையினால் பாதிப்பு ஏற்படும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் சேதமடையும் சாலைகளை போக்குவரத்திற்கு உகந்த வகையில் உடனுக்குடன் சீரமைத்திடும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மழைநீர் இணைப்பு கால்வாய்களை இணைத்தல் மற்றும் பழுதடைந்துள்ள மழைநீர் வடிகால்வாய்களை சீரமைத்தல் மற்றும் இணைப்பு கால்வாய் பகுதிகளில் சிறுபாலங்களை சீரமைத்தல் மற்றும் தேவையான இடங்களில் புதிய சிறுபாலங்கள் அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்திடும் பகுதிகளில் வெள்ள நீரை விரைந்து வெளியேற்ற தேவையான மின் மோட்டார்கள், பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் போன்ற இதர தளவாட பொருட்கள் மாநகராட்சி சார்பில் கொள்முதல் செய்வது, தனியார் வெளிகொணர்வு ஆட்கள் தயார் நிலையில் வைத்தல் மற்றும் ஏரிகள் மற்றும் கால்வாய்களில் வெள்ள நீர் வழிந்தோடும் பட்சத்தில் அதற்கு தேவையான மணல் முட்டைகள் இருப்பு வைத்தல் போன்ற பணிகள் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள காலிமனை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளில் வளர்ந்துள்ள முட்புதர்கள், குப்பை கழிவுகள் மற்றும் கழிவுநீரால் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு மழைக்கால தொற்று நோய்கள் ஏற்படுகிறது. இதை தடுக்கும் விதமாக அனைத்து காலி மனைகளின் உரிமையாளர்கள் தங்களது மனைகளை சுத்தம் செய்து, நீர் தேங்காமல், மண் உயர்த்தி, வேலி அமைத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், காலி மனைகளை உரிமையாளர்கள் சுத்தம் செய்ய தவறும் பட்சத்தில் 2016ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மைத்திட்ட விதிகளின்படியும், 1939ம் ஆண்டு தமிழ்நாடு பொதுசுகாதார சட்ட விதிகளின்படியும், காலி மனை உரிமையாளர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.