சென்னை, நவ.11: கோயில் குளத்தில் மூழ்கி மகன் பலியான சோகத்தில் விரைவு ரயில் முன் பாய்ந்து மகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அச்சிறுப்பாக்கம் அருகே சோகத்தை ஏற்படுத்தியது. அச்சிறுப்பாக்கம் அருகே கொங்கரை மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் புருஷோத்தமன் (11), கொங்கரைமாம்பட்டில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால், கொங்கரை மாம்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் பின்புறம் விளையாடியபோது, அங்குள்ள குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மகன் அஸ்தியை மாமல்லபுரம் பகுதி கடலில் கரைக்க செந்தில்குமார் சென்றுவிட்டார்.
இந்தநிலையில் ஒரே மகனை இழந்த தாய் ஜெயலட்சுமி (36) மனமுடைந்து கதறி அழுதபடி இருந்துள்ளார். மன அழுத்தம் அதிகமானதால் அவர் தனது மகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, 8ம் வகுப்பு படிக்கும் தனது மகள் பத்மாவதியுடன் (14) சேர்ந்து, நேற்று கரசங்கால் என்ற இடத்திற்கு ஜெயலட்சுமி சென்றுள்ளார். அங்குள்ள தண்டவாளத்தில், திருப்பதியில் இருந்து புதுச்சேரி சென்ற பயணிகள் விரைவு ரயில் வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரயில் முன் பாய்ந்து தாய், மகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார், இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த துக்கத்தில் மகளுடன் சேர்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

