புழல்: புழல் லட்சுமிபுரம் காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் காதர்பாஷா (39). கடந்த 17 வருடங்களுக்கு முன்பு நெய்வேலி, வடலூரைச் சேர்ந்த நிலோபர் நிஷா (38) என்ற கணவரை இழந்த பெண்ணை 3வதாக திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில், காதர் பாஷாவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் காதர்பாஷாவுக்கும், நிலோபர் நிஷாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் இரவு வீட்டுக்கு வந்த காதர் பாஷாவிடம், ‘ஏன் இவ்வளவு நேரம் கழித்து வருகிறீர்கள்என்று நிலோபர் நிஷா கேட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நிலோபர் நிஷா, சமையல் அறைக்குச் சென்று அங்கு கடாயில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெய்யை எடுத்து கணவரின் உடல் மீது ஊற்றியதாக தெரிகிறது. இதில் உடல் வெந்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காதர்பாஷாவை
108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி புழல் போலீசார் வழக்குபதிவு செய்து நிலோபர் நிஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.