வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை சாலைகளில் படிந்திருந்த 2,783 மெட்ரிக் டன் மண் அகற்றம்: மாநகராட்சி தகவல்
சென்னை, அக். 10: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் உள்ள 7,835 சாலைகளிலிருந்து கடந்த 13 நாட்களில் 2,783 மெட்ரிக்டன் மண் மற்றும் மண் துகள்கள் அகற்றப்பட்டுள்ளன என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மழைநீர் வடிகால்கள் கட்டுதல், கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் சேகரிப்பு தொட்டிகளில் தூர்வாருதல், அனைத்து கல்வாய்களிலும் தூர்வாரி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளுதல், குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை மேம்படுத்தி மழைநீரை அதிகளவில் சேகரித்தல், மரக்கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட தொடர்புடைய பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மழைக்காலங்களில் பேருந்து சாலைகள் மற்றும் அனைத்து உட்புறச் சாலைகளின் ஓரங்களில் படிந்துள்ள மண் மற்றும் மண் துகள்கள் மழைநீரோடு சென்று வண்டல் சேகரிப்புத் தொட்டியிலும், அதன் மூலமாக மழைநீர் வடிகால்களிலும் சென்று அடைப்பை ஏற்படுத்தி மழைநீர் செல்வதில் தடை ஏற்படுவதைத் தடுத்திடும் வகையில், சாலைகளின் ஓரங்களில் படிந்துள்ள மண், மண் துகள்கள் மற்றும் சிறு சிறு குப்பைகள் அகற்றும் பணியானது பணியாளர்களாலும், இயந்திர பெருக்கிகளின் வாயிலாகவும், கடந்த 26ம் தேதி முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 26ம் தேதி முதல் 8ம் தேதி வரையிலான 13 நாட்களில் சென்னை மாநகராட்சியில் சாலைகளின் ஓரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மண் மற்றும் மண் துகள்கள் அகற்றும் பணியின் மூலம் 7,749 உட்புறச் சாலைகள் மற்றும் 86 பேருந்து சாலைகள் என மொத்தம் 7,835 சாலைகளில் இருந்து 2,783 மெட்ரிக் டன் மண் மற்றும் மண் துகள்கள் அகற்றப்பட்டுள்ளன. இதர பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் இந்தப் பணியானது தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் சாலைகள், தெருக்கள் மற்றும் பொது இடங்களில் ஏற்படும் மழைநீர் த்தேக்கத்தினை தவிர்த்திடும் வகையிலும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்திடும் வகையிலும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கைப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.