சென்னை விமான நிலையம் - திரிசூலம் - மெட்ரோ ரயில் நிலையங்களில் இணைப்பு சுரங்கப்பாதை பராமரிப்பு இல்லை: காட்சி பொருளான லிப்ட் இருளில் தவிக்கும் பயணிகள்
மீனம்பாக்கம், செப். 10: சென்னை விமான நிலையம் - திரிசூலம் மெட்ரோ ரயில் நிலையம் இணைப்பு சுரங்கப்பாதை பராமரிப்பு இல்லாமல் லிபட் இயங்காமலும், மின்விளக்குகளின்றி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சென்னை விமான நிலையம்- திரிசூலம் ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் நீளமான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை சென்னை - திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து, சென்னை விமான நிலையத்திற்கும், மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் இணைப்பு பாதையாக உள்ளது.
இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டபோது, சென்னை விமான நிலைய பயணிகள், ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அதனைத்தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலைய வளாகத்துக்குள் அமைந்துவிட்டதால், இப்போது மெட்ரோ ரயில் பயணிகளும் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த சுரங்கப்பாதை அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரையில் எப்போதும் விமான பயணிகள், விமான நிலைய ஊழியர்கள், மெட்ரோ ரயில் பயணிகள், மின்சார ரயில் பயணிகள் பயன்படுத்தும் முக்கியமான சுரங்கப்பாதையாக அமைந்துள்ளது.
ஆனால், இந்த சுரங்கப்பாதை பயணிகளுக்கு போதிய வசதி இல்லாமல் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ள இந்த சுரங்கப்பாதையில் இன்வெர்ட்டர் வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், சுரங்கப்பாதை இருள் மூழ்கிவிடுகிறது. அந்த நேரத்தில் சுரங்கப்பாதையை கடந்து செல்லும் பயணிகள் பெரும் அச்சமடைகின்றனர். பெரும்பாலான பயணிகள், தங்களுடைய செல்போனில் உள்ள டார்ச் லைட்டை ஒளிர செய்து, அந்த வெளிச்சத்தில் சென்று வருகின்றனர்.
அதேபோல், மின்சாரம் இருக்கும் போதும், சுரங்கப்பாதைக்குள் உள்ள பல விளக்குகள், எரியாமல் இருப்பதால் ஆங்காங்கே இருள் சூழ்ந்துள்ளது. அதுமட்டுமின்றி பல விளக்குகள் பழுதடைந்து தொங்கிக் கொண்டு இருக்கின்றன. சில விளக்குகள் மிகவும் ஆபத்தான நிலையில் தாழ்வாக தண்ணீர் குழாயில் கட்டி வைத்திருக்கும் நிலையில் எரிந்து கொண்டிருக்கின்றன. சுரங்கப்பாதையில் நடந்து செல்லும் சிறுவர்கள் யாராவது, விளையாட்டுத்தனமாக, எரிந்து கொண்டிருக்கும் டியூப் லைட்டை தொட்டால் மின்சாரம் பாய்ந்து, உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
அதுமட்டுமின்றி, மின் வயர்கள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டு இருக்கின்றன. மழை காலங்களில் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் ஒழுகுவதால் அப்போது மின் கசிவு ஏற்பட்டு, சுரங்கப்பாதையில் நடந்து செல்லும் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மழைக்காலத்திலும் இந்த சுரங்கப்பாதையில் சுமார் 2 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கும். அப்போது பயணிகள் மிகவும் ஆபத்தான நிலையில், சப்வேயில் நடந்து செல்கின்றனர். குறிப்பாக, விமான நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஷூக்கள் அணிந்து செல்லும்போது, ஷூ சாக்ஸ்க்குள், சுரங்கப்பாதையில் தேங்கி கிடக்கும் தண்ணீர் புகுந்துவிடுகிறது.
மேலும், இந்த சுரங்கப்பாதையில் பயணிகள், குறிப்பாக முதியோர் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த லிப்ட் சில ஆண்டுகளாக செயல்படாமல் காட்சிப் பொருளாக இருக்கிறது. இதனால் வருகிற மழைக்காலத்திற்கு முன்னதாக, இந்த சுரங்கப்பாதையில், மோசமான நிலையில் உள்ள மின் வயர்கள், மின்விளக்குகள் போன்றவைகளை சரி செய்வதோடு, சில ஆண்டுகளாக இயங்காமல் உள்ள லிப்டையும் இயங்க வைக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர். இது சம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறை தரப்பில் விசாரித்த போது, இந்த சுரங்கப்பாதை பராமரிப்பு பணியை, தனியார் ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். அவர்கள் வரும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, மின்சாரம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் செய்து முடித்து விடுவார்கள். அதேபோல், இயங்காமல் உள்ள லிப்டை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.