சென்னை, செப்.10: காவலர் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் 200 காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ரத்ததானம் வழங்கினர். முதன் முதலாக 1859ம் ஆண்டு ‘மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றிவிக்கப்பட்ட செப்டம்பர் 6ம் நாள், இனி ஆண்டுதோறும் ‘காவலர் நாளாக’ கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதை தொடர்ந்து சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி செப்டம்பர் 6ம் தேதி முதல் காவலர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல்துறையில் மத்திய குற்றப்பிரிவு, சைபர் க்ரைம் காவல் நிலைய பிரிவினரால் கடந்த 7ம் தேதி முதல் வேளச்சேரியில் உள்ள வணிக வளாகம், மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகில் பொதுமக்களிடம் ‘சைபர் குற்றத்தடுப்பு’ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், புதுப்பேட்டை ஆயுதப்படை துணை கமிஷனர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நேற்று ரத்த தான முகாம் நடந்தது. இந்த முகாமில் சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 200க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.
+
Advertisement