Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அச்சுறுத்தும் வெறிநாய் கடி தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு தடுப்பூசி:  30 மருத்துவ குழுக்கள் அமைப்பு சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை, ஆக.9: சென்னையில் அச்சுறுத்தும் வெறிநாய் கடியில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க சென்னையில் தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு தடுப்பூசி திட்டத்தை சென்னை மாநகராட்சி இன்று முதல் தொடங்குகிறது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் பயத்துடனே செல்ல வேண்டி உள்ளது. வாகனங்களில் வேகமாக செல்லும்போது நாய் துரத்துவதால் அச்சத்தில் நிலை தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நடக்கின்றன. அதிகாலை நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி செல்பவர்கள் இரவு நேரம் வேலை முடிந்து விடு திரும்புவோர், ரயில்களில் இருந்து இறங்கி வீடுகளுக்கு செல்பவர்கள், முதியோர் என தெரு நாய்கள் பயமுறுத்தாதவர்கள் யாருமே இல்லை.

சென்னை போன்ற பெருநகரங்களில் வீடுகளில் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது அதிகரித்து வருகிறது. ஆர்வக்கோளாறு காரணமாக நாய்கள் வளர்க்கும் பெரும்பாலானோர் அதன் பராமரிப்பில் உரிய கவனம் செலுத்துவதில்லை. சிலர் நாய்களை தெருக்களில் அனாதையாக விட்டு விடுகின்றனர். உரிய முறையில் பராமரிக்கப்படாத நாய்களால், தெருக்களில் நடமாடும் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் எளிதாக நாய்கடிக்கு ஆளாகி பாதிக்கப்படுகின்றனர். நாய் கடித்து காயம் அடைபவர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது. உரிய சிகிச்சை அல்லது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் நாய்கடியால் பாதிக்கப்பட்டோர் மரணம் அடையவும் நேரிடுகிறது. நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்போர் நாய்கள் பிறந்த முதல் ஆண்டில் அவைகளுக்கு இருமுறை அரசு கால்நடை மருத்துவமனைகளில் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கால்நடை மருத்துவமனைகளில் கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும்.

அதைத் தொடர்ந்து நாய்களுக்கு ஆண்டுதோறும் ஒருமுறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். நாய்களை செல்லப்பிராணிகளை வளர்ப்போருக்கே இது போன்ற விவரங்கள் தெரியாது என்பதால் உரிய முறையில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில்லை. அதே நேரத்தில் கவனிப்பாரற்று வீதிகளில் திரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. முறையான சிகிச்சைகளும் அளிக்கப்படுவதில்லை. எனவே, தெருநாய் கடிக்கு ஆளாகும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலருக்கு ரேபிஸ் தொற்று ஏற்படுவது கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. கடந்த 2024ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, சென்னையில் 1.8 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. இவற்றில் சுமார் 30 சதவீத நாய்களுக்கு மட்டுமே இனப்பெருக்கக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது, ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்தார். ‘பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய, குறிப்பாக நகரப் பகுதிகளில், நாய்கள் இனப்பெருக்க கட்டுபாடு நடவடிக்கைகளை தீவிரமான முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகளை உருவாக்க வேண்டும்’ என்று அவர் கூறியிருந்தார்.

மேலும் சென்னை மாநகராட்சியில் புதிதாக 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்கள் உருவாக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், சென்னையில் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அதிரடியாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று முதல் இத்திட்டத்தை தொடங்குகிறது. தெரு நாய்களை பிடித்து கருத்தடை மையத்திற்குக் கொண்டு சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இப்போது தெருக்களுக்கே சென்று தடுப்பூசி போடப்படுவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

1.8 லட்சம் இலக்கு

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சியில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒவ்வொரு மண்டலமாக நாள் ஒன்றுக்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட நாய்களுக்கு அடையாளமாக ‘மை’ வைக்கப்படும். சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெருநாய்களில், 80 சதவீதம் நாய்களுக்கு அடுத்த 50 முதல் 60 நாட்களில் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவக் குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவார்கள். தெரு நாய்களுக்கு ஆன்டி ரேபிஸ் மற்றும் ஒட்டுண்ணி மருந்து என இரண்டு வகை ஊசிகள் போடப்பட உள்ளது. தடுப்பூசி போடும் பணிகளை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் பிரத்தியேக பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டில் 3,19,432 பேரை நாய்கள் கடித்துள்ளன. அவர்களில் 19 பேர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர். 2022ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 3,64,435 ஆக உள்ளது. இவர்களில் 28 பேர் ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். 2023ம் ஆண்டில் 4,41,804 பேர் நாய் கடிக்கு ஆளாகி உள்னர். அவர்களில் 18 பேர் ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.