Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் மழைநீர் இணைப்பு கால்வாய் பணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை, அக்.8: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் மழைநீர் இணைப்பு கால்வாய் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையின்போது, சென்னையில் இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பை தடுக்க, தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் சேர்ந்து கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணிகளை, பருவமழைக்கு முன்னதாகவே முடிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் மொத்தம் 15 மாநகராட்சி மண்டலங்கள் உள்ளன. இதில், சென்னை மாநகராட்சியில் 3,040 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் வலையமைப்பு நீண்டுள்ளது. இதில் இந்தாண்டு 1,084 கிலோமீட்டர் நீளத்திற்கு வடிகால்களை தூர்வார சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணிக்காக, இந்த ஆண்டு 1,032 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி புதிய மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்வது, ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால் பணிகளை புனரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள ஏரிகளில் ஆகாயத்தாமரையை அகற்றுதல், ஏரிகளின் கரைகளை பலப்படுத்துதல், கொசஸ்தலை மற்றும் அடையாறு ஆறுகளை சீர்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெறுவதுடன், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் முகலிவாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம் ஆகிய பகுதிகளில் ரூ.500 கோடி மதிப்பில் பாதாளசாக்கடை அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

மேலும், மழைநீர் வடிகால்களில் உள்ள வண்டல்கள் மற்றும் கழிவுகளை நவீன ஜெட்ராட்டிங் சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் அகற்றி தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு பருவமழை காலத்தில், அதிகமாக நீர்த்தேங்கிய பகுதிகளைக் கண்டறிந்து, அந்த பகுதிகளில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால், அந்த இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்க்கொள்வது சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுடன் கூடிய சாலை பிரச்னைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழைநீர் வடிகால் பணிகளுடன் சேர்த்து, திடக்கழிவு மேலாண்மைப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலை சீரமைப்பு பணிகள், புதிய சாலை அமைத்தல், குளம் தூர்வாருதல், ஏரிகள் புனரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளில், வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை விரிவுபடுத்தப்படுவதோடு, மெட்ரோ நிர்வாகம் சார்பில் 83 கோடி ரூபாய் மதிப்பில், 200 மீட்டர் நீளத்திற்கு இரும்பு பாலம் ஒன்று நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. புறநகரில் வெள்ளநீரை வெளியேற்ற 2.8 கிலோமீட்டர் நீளம் கொண்ட முக்கியமான நீர்வழி பாதையாக இது அமைந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் புறநகர் பகுதிகளில் ஏற்படும் வெள்ள சேதம் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் தற்போது கொட்டிவாக்கம், தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணா நகர், தேனாம்பேட்டை மற்றும் வடக்கு மண்டலங்களான திருவொற்றியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள, மழைநீர் வடிகால்களின் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும், தற்போதுள்ள மழைநீர் வடிகால் வலையமைப்பில் விடுபட்ட இணைப்புகளை கண்டறிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் வடிகால் வசதியை மேம்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக, சென்னை மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.பி.ராமன் சாலையில், மழைநீர் தேங்காமல் எளிதாக பக்கிங்காம் கால்வாய்க்கு செல்லும் வகையில் மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டு உள்ளதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, வி.பி.ராமன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலை சந்திப்பு பகுதியில், ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகளில் மழைநீர் கால்வாய்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இணைப்பு கால்வாய் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அவர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய்கள் மூலமாக வி.பி.ராமன் சாலை பகுதியில் மழைநீர் எளிதாக பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று அங்கிருந்து கடலுக்கு சென்று விடும். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மாமன்ற உறுப்பினர் கமலா செழியன், சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.