Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இனி பழைய சிம் கார்டு தேவைப்படாது? மிரட்டும் இ-சிம்...!

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி, தகவல் தொடர்பு, கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் பெரும் முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தாலும், வேலைவாய்ப்பின்மை, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மனிதர்கள் இயந்திரங்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலை போன்ற சவால்களும் உருவாகியுள்ளன. ஸ்மார்ட்போன்கள் விஷயத்தில், ஆப்பிள் நிறுவனம் என்ன செய்தாலும் மற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் அதையே பின்பற்றும் வழக்கம் உள்ளது. தற்போது, ஆப்பிள் நிறுவனம் சிம் கார்டு இல்லாத ஐபோனை அறிமுகப்படுத்தியிருப்பது, இந்த தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

அனைத்து செல்போன் பயனர்களும் தங்கள் செல்போன் செயல்பட வேண்டுமெனில் சிம்கார்டு அவசியம். ஆனால் ஐபோன் ஏர்-ஐ வைத்திருப்பவர்களுக்கு சிம்கார்டு தேவையே இல்லை நிலை உள்ளது. ஐபோன் இ-சிம் உடன் மட்டுமே இயங்கும். இது, பயனர்கள் தங்கள் நெட்வொர்க்கை அல்லது திட்டங்களை மாற்ற, சிம் கார்டு ட்ரே-ஐத் திறக்க ஒரு குண்டூசியை கொண்டு குடைந்து சிரமப்பட தேவையில்லை. CCS இன்சைட் நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் கெஸ்டர் மான், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, ‘‘பொருளாதார ரீதியான சிம் கார்டின் முடிவின் தொடக்கத்தை குறிக்கிறது” எனக்கூறியுள்ளார். ஆனால், நாம் அனைவரும் நமது சிறிய சிப் உள்ள பிளாஸ்டிக் துண்டுகளை நிரந்தரமாக கைவிட எவ்வளவு காலம் ஆகும்? அது நமது போன்களை பயன்படுத்தும் விதத்தில் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?

பல ஆண்டுகளாக சிம் கார்டுகள் ஸ்மார்ட்போன்களுடன் இணைந்ததாக இருந்துள்ளன. ‘சிம்’ என்பதன் விரிவாக்கம் Subscriber Identity Module (பயனர் அடையாள மாதிரி) என்பதாகும். இந்த சிப் உங்கள் போனின் ஒரு முக்கிய பகுதியாகும். இது உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநருடன் இணைய, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பயன்படுத்த, உங்கள் டேட்டாவை இயக்க உதவுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இ-சிம் ஒரு மாற்று வழியாக உருவெடுத்துள்ளது. புதிய போன்களில் பயனர்களுக்கு ஒரு பாரம்பரிய சிம் அல்லது இ-சிம் இரண்டையும் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

ஆப்பிள் குடும்பத்தின் புதிய மற்றும் மிக மெல்லிய தயாரிப்பான புதிய ஐபோன் ஏர் பற்றிய அறிவிப்பில், அது இ-சிம்-ஐ மட்டுமே கொண்ட வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது. இ-சிம் மட்டுமே கொண்ட ஐபோன் உலகம் முழுவதும் கிடைப்பது இதுவே முதல்முறை. அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்கள் 2022 முதல் இ-சிம் மட்டுமே கொண்ட ஐபோன்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஆப்பிள் நிறுவனம்கூட, வழக்கமான சிம் கார்டை முழுமையாக கைவிடவில்லை. தற்போது அந்நிறுவனம் அறிவித்த மற்ற புதிய ஐபோன்களான 17, 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை சில சந்தைகளில் இ-சிம் மட்டுமே கொண்டவையாக இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், பெரும்பாலான நாடுகளில் அவை வழக்கமான சிம் கார்டு ஸ்லாட்டுகளை தக்கவைத்துக்கொள்ளும்.

சாம்சங் மற்றும் கூகுள் போன்ற பிற பெரிய உற்பத்தியாளர்களும், இ-சிம்களை ஒரு தேர்வாக ஏற்றுக்கொண்டாலும், பெரும்பாலான இடங்களில் வழக்கமான சிம் கார்டுகளை இன்னும் பராமரித்து வருகின்றனர். இருப்பினும், முன்னேற்றம் எந்த திசை நோக்கி இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். CCS இன்சைட்டின் சமீபத்திய கணிப்பின்படி, 2024 இறுதியில் 1.3 பில்லியன் இ-சிம் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் இருந்தன. இந்த எண்ணிக்கை 2030 க்குள் 3.1 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலப்போக்கில், சிம் ட்ரே முற்றிலும் மறைந்துவிடும் என எதிர்பார்க்கலாம் எனக்கூறியுள்ளது. இ-சிம்-க்கு மாறுவது ‘பல நன்மைகளை’ வழங்குவதாக கூறுகிறார்கள். மிக முக்கியமாக, போனின் உட்புறத்தில் சிறிது இடத்தை மிச்சப்படுத்துவதால், பெரிய பேட்டரிகளை பயன்படுத்த முடியும்.

பிளாஸ்டிக் சிம் கார்டுகள் பயன்படுத்தப்படாததால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகளையும் அந்நிறுனம் வலியுறுத்துகிறது. மேலும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் மக்கள் இ-சிம்-ஐ பயன்படுத்தும்போது அதிக சேவை வழங்குநர் விருப்பங்கள் கிடைக்கும் என்றும் ‘கட்டண அதிர்ச்சிகள்’ இருக்காது என்றும் நம்புகிறார்கள். இது, புதிய வாடிக்கையாளர் நடத்தைகளை கொண்டுவரும் என்றும், ‘‘மக்கள் தங்கள் மொபைல் வழங்குநருடன் தொடர்புகொள்ளும் விதத்தை மெதுவாக மாற்றும்” என்றும் கூறுகிறார்கள். உதாரணமாக, சில வாடிக்கையாளர்கள் தங்கள் வழங்குநருடன் சிம் குறித்து பேச, ஒரு கடைக்கு செல்ல தேவையில்லை. ஒரு கடைக்கு நேரடியாக செல்லும் நேரத்தை மிச்சப்படுத்த விரும்புபவர்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கலாம். ஆனால், எல்லா மாற்றங்களை போலவே, இது அனைவராலும் வரவேற்கக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த மாற்றம் வயதானவர்கள் அல்லது தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் நம்பிக்கையில்லாதவர்களுக்கு பெரிய ஆச்சரியம் எதுவும் தராது.