Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் விபத்து நடைபெறும் சாலைகளில் 513 இடங்களில் ஆபத்து குறியீடு: மாநகராட்சி தீவிரம்

சென்னை, ஆக.8: சென்னையில் விபத்து நிகழும் சாலைகளில் 513 இடங்களில் ஆபத்து குறியீடுகள் அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னையில் சாலை விபத்துகளை குறைப்பதற்கும், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அதிகப்படியாக போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றவும், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவும், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் விபத்துகளை குறைக்க போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக போக்குவரத்து காவல் துறை, நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து விபத்துகளை குறைப்பதற்கான தொழில்நுட்ப அணுகுமுறைகள் குறித்து காவல் துறையினருக்கு பல பயிற்சி திட்டங்களையும், பள்ளி குழந்தைகள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் விநியோக முகவர்கள் போன்றவர்களுக்கான சாலை பாதுகாப்பு கல்வி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதேபோல், சாலை விபத்துகளை தவிர்த்து உயிரிழப்புகளை தடுக்க, புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பான ஆய்வு கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் நடந்தது. அதில், அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து, விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் உயிரிழப்புகளை தடுக்கவும், விபத்துகளை தவிர்க்கவும், முன்னெடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என, அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் வரைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

 பல்துறை நிபுணர்களை உள்ளடக்கிய, சாலை பாதுகாப்பு ஆணையம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கப்படும். தொலைநோக்கு திட்டத்துடன், விபத்துகளை தவிர்ப்பது இதன் முதன்மையான இலக்கு

 சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவ கவனிப்பை, அரசே மேற்கொண்டு இலவச சிகிச்சை அளிக்கும்.

 உடனடி மருத்துவ சேவையை உறுதி செய்ய, தமிழ்நாடு அவசர மருத்துவ சேவைகள் சட்டம்.

 சாலை பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாற, பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள், விபத்தில் முதலுதவி செய்யும் பொதுமக்கள் அனைவருக்கும், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு உருவாக்கும் வகையில், இன்னுயிர் காப்போம் - உதவி செய்’ என்ற திட்டத்தை செயல்படுத்துவது.

 பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள, சாலை விதிகள் குறித்த நெறிமுறைகள், மாணவர்களின் அன்றாட நடைமுறையில் பிரதிபலிப்பதை உறுதி செய்வதும் முக்கியமான செயல் திட்டமாகும். போன்ற திட்டங்கள் அதில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாநகரில் சாலை பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, மைய தடுப்புசுவர்கள் மற்றும் சாலை முனைகளில் சாலை ஆபத்து குறியீடுகள் அமைக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி, வாகன ஓட்டிகளுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பான சாலைச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 1 முதல் 15 வரை, இதுவரை 160 முக்கிய சாலைகளில் இந்த ஆபத்து குறியீடுகள் நிறுவப்பட்டுள்ளன. இவை, இரவு நேரங்களிலும் மோசமான வானிலையிலும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டுவதற்கும், விபத்து அபாயங்களைக் குறைப்பதற்கும் உதவுகின்றன.

மாநகராட்சியின் ஆய்வில், நகரின் அபாயகர பகுதிகள் மற்றும் விபத்து நிகழும் சாலைகளில் மேலும் 513 இடங்களில் ஆபத்து குறியீடுகள் அமைக்க வேண்டிய கட்டாயம் கண்டறியப்பட்டுள்ளது. இதில், 353 இடங்களில் தற்போது பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த குறியீடுகள், மைய தடுப்புசுவர்கள், சாலை முனைகள் மற்றும் ஆபத்தான வளைவுகளில் அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்குகின்றன.

இதன் மூலம், சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதுடன், பாதசாரிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.

சென்னையின் பரபரப்பான சாலைகளில், குறிப்பாக அதிக வாகன நெரிசல் உள்ள பகுதிகளில், இத்தகைய குறியீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாநகராட்சி, இந்த பணிகளை துரிதப்படுத்தி, அனைத்து மண்டலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்காக, நவீன தொழில்நுட்பங்களையும், தரமான பொருட்களையும் பயன்படுத்தி, குறியீடுகள் நீண்ட காலம் தாங்கக்கூடிய வகையில் அமைக்கப்படுகின்றன. இந்த முயற்சி, சென்னையை மிகவும் பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட மாநகரமாக மாற்றுவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பயண அனுபவம் மேம்படுவதுடன், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் அதிகரிக்கும்.