தண்டையார்பேட்டை, ஆக.8: காவலர் அடையாள அட்டையை போலியாக தயாரித்த நகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை போலீசார் வாகன தணிகையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அந்த நபர் போலீஸ் எனக் கூறினார். சந்தேகமடைந்த போலீசார் அவரது காவலர் அடையாள அட்டையை சோதனை செய்தபோது போலி என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், வண்ணாரப்பேட்டை முத்தையா முதலி தெருவைச் சேர்ந்த வினோத் சோப்ரா (48) என்பதும், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நகைக் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க போலியாக காவலர் அடையாள அட்டையை தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. சோதனையில் ஈடுபடும் போலீசாரிடம், காவலர் எனக்கூறிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து வினோத் சோப்ராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
+
Advertisement