சைதாப்பேட்டை பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோயிலின் நிர்வாக குளறுபடி குறித்து விசாரணை : அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, டிச.7: மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோயில் நிதி முறைகேடு, நிர்வாக குளறுபடி குறித்து விசாரணை நடத்த அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோயிலுக்கு சொந்தமான சொத்தை குத்தகைக்கு எடுத்த அதே பகுதியைச் சேர்ந்த டாக்டர் ராகவேந்திர கார்த்திக் என்பவர், குத்தகையை பதிவு செய்யுமாறு சைதாப்பேட்டை சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, குத்தகையை பதிவு செய்யுமாறு கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, குத்தகை காலத்தை குறிப்பிடாமல் சந்தை மதிப்பைவிட குறைவாக வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சைதாப்பேட்டையை சேர்ந்த டாக்டர் ரேணுகா என்பவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் சொத்துகளை நிர்வகிப்பதில் நிர்வாக குளறுபடி உள்ளதாக அறநிலையத்துறைக்கு புகார்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மேல்முறையீட்டு மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் தரப்பில் கூறப்பட்ட நிதி முறைகேடு, நிர்வாக குளறுபடி புகார் தொடர்பாக கூடுதல் ஆணையர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமித்து அறநிலையத்துறை விசாரணை நடத்த வேண்டும். இந்த கோயில் பொது கோயிலா இல்லையா என்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அடிப்படையில் ஆய்வு செய்து நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிவெடுக்க வேண்டும். அதுவரை, சம்பந்தப்பட்ட கோயிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.


