சென்னை, அக்.7: கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், கரையோரத்தில் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கான பயிற்சி, மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. தேசிய மாசு தடுப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் இந்திய கடலோர காவல் படை, சென்னை மாநகராட்சி, மாநில பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத்துறை, மீன்வளத்துறை, சென்னை துறைமுக நிர்வாகம், எண்ணெய் தொழில் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுடன் ஒருங்கிணைந்து, கடலில் எண்ணெய் கசிவு ஏற்படும் நிகழ்வுகளில் கரையோரத்தில் எண்ணெய் அகற்றுவதற்கான பயிற்சி இந்திய கடலோர காவல்படை பொது இயக்குநர் மேற்பார்வையில் நேற்று காலை நடைபெற்றது.
இதில் மாநகராட்சி அலுவலர்களின் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பி.பி.இ கருவிகளுடன் கரையோர மீட்புப் பணியில் பங்கேற்றனர். இதில், 2 கப்பல்களின் மோதல் சம்பவம் மாதிரி அமைக்கப்பட்டு, எண்ணெய் கசிவு நிகழ்த்தப்பட்டு, கடலோர காவல்படை கப்பல்கள், மாசுக் கட்டுப்பாட்டு படகுகள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி எண்ணெய் கட்டுப்படுத்தும் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தடுப்பு திரைகள், எண்ணெய் உறிஞ்சும் கருவிகள், ரசாயன தடுப்புகள் போன்றவை பயன்படுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மாலையில் நடைபெற்ற பயிற்சியில் எண்ணெய் கசிவு கடற்கரையை அடைந்ததாக கருதப்பட்டு, சென்னை மாநகராட்சி மற்றும் மாநில துறைகள் கடலோர காவல்படையுடன் இணைந்து கரையோரத்தில் எண்ணெய் நீக்கும் மாதிரி செயலை நிகழ்த்தினர். அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பை பரிசோதித்தல், கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு உபகரணங்களின் செயல்திறனை மதிப்பிடுதல், எண்ணெய் கசிவு சம்பவத்தின் பல்வேறு நிலைகளிலும் தகுந்த நடவடிக்கையை முன்னெடுத்து காட்டுதல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை இந்தப் பயிற்சியின் முக்கிய இலக்குகள் ஆகும்.
இந்த மாதிரி பயிற்சியின் மொத்த பொறுப்பாக இந்திய கடலோர காவல்படையின் பொது இயக்குநர், கடல்சார் நடவடிக்கைகளை இந்திய கடலோர காவல்படையும், கரையோர நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி, மற்றும் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை இணைந்து, கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்தும் செயல்படுத்தியது. மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, சென்னை துறைமுக நிர்வாகம், தீயணைப்புத்துறை, மீன்வளத்துறை, கப்பல்/ எண்ணெய் கையாளும் நிறுவனங்கள், கடற்படை, விமானப்படை, சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளிட்ட மற்ற துறைகளும் இணைந்து செயல்பட்டன.
இந்த மாதிரி பயிற்சியில் எண்ணெய் மற்றும் எண்ணெய் மணலை தற்காலிகமாக சேமிப்பதற்கான உபகரணங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை இடம் பெற்றன. நிகழ்வில் இந்திய கடலோர பாதுகாப்புப் படையின் தலைவர் பரமேஷ் சிவமணி, கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்பு படை தளபதி டட்விந்தர் சிங் சைனி, கடலோர காவல் படையின் மண்டல மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் அலுவலர் (கிழக்கு) பிரேம் குமார், தமிழ்நாடு தீயணைப்புத் துறை இயக்குநர் சீமா அகர்வால், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையர் கௌஷிக், மற்றும் தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.