Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் சினிமா பாணியில் வீடு புகுந்து மாணவியை கடத்திய வாலிபர்: போலீசார் சுற்றிவளைத்தனர்

அண்ணாநகர், டிச.6: முகப்பேர் பகுதியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை வீடுபுகுந்து வாலிபர் காரில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டிவனம் செக்போஸ்ட் அருகே, போலீசார் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கதக்க இளம்பெண், அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவி, மாலையில் கல்லூரி முடிந்ததும் மாநகர பஸ்சில் வீட்டிற்கு புறப்பட்டார்.

முகப்பேர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய மாணவி, அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பர்தா அணிந்து வந்த பெண், இவரை பின்தொடர்ந்து, அருகில் சென்று, அவசரமாக ஒருவரிடம் பேச வேண்டும், உங்களது செல்போனை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த மாணவி, அங்கிருந்து வேகமாக வீட்டுக்கு சென்று, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு பெற்றோர் சென்றனர்.

அப்போது, ஏற்கனவே மாணவியை பின்தொடர்ந்து வந்த பர்தா அணிந்த வந்த அந்த பெண், இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் புகுந்தார். அவரை பார்த்ததும் சுமதி அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். அதற்குள், சுமதியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, வெளியே தயாராக நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்றி கடத்தி சென்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காரை விரட்டினர். அதற்குள் கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றது. உடனே சுமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் நொளம்பூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கார் எண் பதிவாகி இருந்தது. இதையடுத்து சுமதியின் செல்போன் நம்பரை டவர் மூலம் கண்காணித்தபோது, டவர் திண்டிவனததை காட்டியது. உடனே திண்டிவனம் செக்போஸ்ட்டில் பணிபுரியும் போலீசாரிடம் இந்த தகவலை கூறி காரின் எண்ணை கொடுத்தனர். அந்த நேரத்தில் அந்த கார், செக்போஸ்ட் பகுதியில் வந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று சுமதியை பத்திரமாக மீட்டு 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை நேற்று அதிகாலையில் நொளம்பூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த சாம்சுந்தர் (24) மற்றும் கார் டிரைவர், பர்தா அணிந்த பெண் என 3 பேரையும் கைது செய்தனர். இவர்களில், சாம்சுந்தர், சுமதியை காதலித்து வந்ததாகவும், அவரது நடவடிக்கை சரியில்லாததால் அவரிடம் பேசுவதை சுமதி தவிர்த்துள்ளார். ஆனால், சாம்சுந்தர் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், சுமதியை காரில் கடத்தி கட்டாய திருமணம் செய்தால் யாரும் பிரிக்க முடியாது என எண்ணி கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.