Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளிக்கரணை, அம்பத்தூர் தொழில்துறை பகுதிகளில் ரூ.221 கோடியில் கால்வாய் வெள்ள மேலாண்மை பணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக.6: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை தணிப்பதற்காக ரூ.91 கோடி மதிப்பீட்டில் பெருமூடிய கால்வாய் அமைத்தல் மற்றும் அம்பத்தூர் தொழில்துறை பகுதிகளில் வெள்ள பாதிப்பை குறைப்பதற்காக ரூ.130 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை ஆகிய பணிகளுக்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று உத்தண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை சோழிங்கநல்லூர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை தணிப்பதற்காக ரூ.91 கோடி மதிப்பீட்டில் தெற்கு பக்கிங்காம் கால்வாயிலிருந்து கடல் வரை நேரடி பெருமூடிய கால்வாய் அமைத்தல் மற்றும் அம்பத்தூர் தொழில்துறை பகுதிகளில் வெள்ள பாதிப்பை குறைப்பதற்காக ரூ.130 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து, திட்டப்பணிகளின் செயல் விளக்க புகைப்படைத்தை பார்வையிட்டார்.

பின்னர் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்புகள் ஏதும் ஏற்படக்கூடாது என்று தொடர்ந்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகின்றோம். இன்றை தினம் கூட தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் பருவமழைக்கான ஆயத்த பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தி விட்டு இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் மூன்று பேரும் கலந்து கொண்டிருக்கின்றோம்.

அரசினுடைய ஆய்வுகூட்டங்களில் எடுக்கப்படுகின்ற முடிவுகளின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. அதில் ஒருபகுதியாக நீர்வளத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற இரண்டு முக்கியமான பணிகளை நேற்று துவக்கி வைத்திருக்கின்றோம். ஒன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியிலிருந்து ஒக்கியம் மடுவு வழியாக தெற்கு பக்கிங்காம் கால்வாய் மூலம் மழைநீர் எளிதாக வடிந்து கடலில் சென்றடைய வேண்டும் என்பதற்காக ரூ.91 கோடி மதிப்பீட்டில் புதிய நேரடி கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்திருக்கின்றோம். இன்னொன்று அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் வெள்ளம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ரூ.130 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை தீர்வு பணிகளையும் துவங்கி வைத்திருக்கின்றோம்.

பருவமழைக் காலங்களில் தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ராம்நகர், பள்ளிக்கரணை, நாராயணபுரம், மடிப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் ஏற்படுவது வழக்கம், கனமழையின் போது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து சுமார் 8,500 கன அடி வெள்ள நீர் வெளியேறுகின்றது. ஆனால் ஒக்கியம் மடுவு மற்றும் தெற்கு பக்கிங்காம் கால்வாயின் வழியே 7,000 கன அடி நீர் மட்டும் தான் வெளியேற முடியும். அதுதான் அதனுடைய கொள்ளளவு அதனால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து தண்ணீர் வெளியேர முடியாமல் தென் சென்னை பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் அந்த வெள்ளம் புகுந்து விடுகின்றது.

எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒக்கியம் மடுவு தெற்கு பக்கிங்காம் கால்வாய் முதல் வங்கக் கடல் வரை வெள்ள நீர் வடிகின்ற வகையில் புதிய நேரடி கால்வாய் அமைக்கும் பணி நடைபெற இருக்கின்றது. இதனால் இனி வரும் காலங்களில் வேளச்சேரி, நாராயணபுரம், ராம்நகர் உள்ளிட்ட இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாது என்று நம்புகின்றோம். அதே போல் அம்பத்தூர் தொழிற்பேட்டையைச் சுற்றி மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். அம்பத்தூர் ஏரியிலிருந்து கொரட்டூர் ஏரிக்கு உபரி நீர் கால்வாய் இல்லாததே அதற்கு காரணம்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை தீர்வு பணித்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அம்பத்தூர் ஏரியிலிருந்து கூவம் நதிக்கு கால்வாய் அமைத்து அம்பத்தூர் ஏரியிலிருந்து சுமார் 350 கன அடி நீர் கூவம் நதிக்கு திருப்பிவிட வழிவகை செய்யப்படும். இந்த பணி நிறைவடைந்தால் அம்பத்தூரிலும் வெள்ள நீர் பாதிப்பு ஏற்படாது. இந்த இரு பணிகளையும் தொடங்கியதன் மூலம் தென்சென்னை மக்கள் மற்றும் அம்பத்தூர் பகுதி மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றியிருக்கிறார்.

இந்த பணிகள் பயன்பாட்டிற்கு வருகின்ற போது பருவமழையின் போது முந்தை ஆண்டுகளைப் போல் வரும் காலங்களில் நிச்சயம் வெள்ள பாதிப்பு இருக்காது. அரசு மேற்கொள்ளும் இந்த பணிகளுக்கு பொதுமக்கள் தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ், நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், மண்டலக் குழுத் தலைவர் மதியழகன், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கோபால கிருஷ்ணண் உள்பட அரசு அலுவலர்கள், நீர்வளத்துறை பொறியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகள் கலந்து கொண்டனர்.