Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெசப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் எதிரில் உள்ள எம்ஜிஆர் சிலையை அகற்றக்கோரி வழக்கு: மாநகராட்சி பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ.5: நெசப்பாக்கம் வரசக்தி விநாயகர் கோயில் எதிரில் உள்ள எம்ஜிஆர் சிலையை அகற்ற கோரிய மனுவுக்கு சென்னை மாநகராட்சி பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் விருகம்பாக்கத்தை சேர்ந்த எம்.கோபால் தாக்கல் செய்த மனுவில், நெசப்பாக்கத்தில் 275 ஆண்டுகள் பழமையான வரசக்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். கடந்த 2017ல் இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலின் ராஜகோபுரமும், கொடிமரமும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக கோயிலின் முன்பகுதியை மறைத்து அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. சென்னை மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பெறாமல் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அந்த சிலைகளை அகற்றுவது தொடர்பாக சம்மந்தப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் இந்த 3 சிலைகளையும் அங்கிருந்து அகற்ற ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் காமராஜர் சிலையை காங்கிரஸ் கட்சியினரும், அண்ணா சிலையை திமுக கட்சியினரும் அகற்றினர். ஆனால், எம்ஜிஆர் சிலையை மட்டும் அகற்றவில்லை. இதையடுத்து, அந்த சிலையை அகற்றுமாறு சென்னை மாநகராட்சியிடம் கடந்த 2017 முதல் தொடர்ந்து மனு கொடுக்கப்பட்டது. அந்த சிலையை அங்கிருந்து அகற்ற அப்பகுதியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கவுதமன் என்பவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். எனவே, கோயிலின் வழிப்பாதை மறைத்து வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையை அகற்றுமாறு சென்னை கலெக்டர் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும், என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்தன்கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் தருமாறு சென்னை கலெக்டர் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.