Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரம்: 22 ஆயிரம் ஊழியர்களை களம் இறக்கியது

சென்னை, டிச.4: சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தததை தொடர்ந்து, மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டிருவகிறது. இதற்காக 22 ஆயிரம் ஊழியர்களை களம் இறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘டிட்வா’ புயலால் சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக காலை முதல் இரவு முழுவதும் விடாது மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கிருந்து மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். தேங்கியுள்ள நீர் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 27 சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள மழை நீர் உடனடியாக மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டதாகவும், குடியிருப்புகள் மற்றும் பிரதான சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடசென்னையில் தாழ்வான பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வீடுகளுக்குள் சிக்கிய பொதுமக்களை தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர். அயனாவரம், கும்மிடிப்பூண்டி, பெரம்பூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், தொடர் கனமழை காரணமாக ஓட்டேரி நல்லான் கால்வாயில் அதிகப்படியாக நீர் வெளியேறியதால், கொளத்தூர், கதிர்வேடு, ரெட்டேரி, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் சாலை முழுவதும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.

இப்பகுதிகளில் மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி சாலையில் மழைநீர் முழங்கால் அளவுக்குத் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல், கோடம்பாக்கத்தில் ரங்கராஜபுரம், ஆசீஸ் தெரு உள்ளிட்ட தெருக்களில் மழைநீர் முழங்கால் அளவுக்குத் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையைக் கடக்க முடியாமல் சிரமத்தைச் சந்தித்தனர். இப்பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களாலும், மழைநீர் வடிகால்வாய் இணைப்பு இல்லாததாலும் சாலைகளில் மழைநீர் தேங்கி வருகிறது. இவற்றை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென மாநகராட்சிக்குப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் ஏழுமலை நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை, எனவும் மழைநீரில் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் உள்ளதால் அச்சமாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். திருவொற்றியூர் ராஜாஜி தெருவில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். இன்னும் 24 மணி நேரத்துக்கும் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மீட்புப் படைகள், மழைநீர் பம்புகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்ட அவசர சேவைகள் முழுமையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் தேங்கும் மழை நீரை அகற்றும் பணியில் 22 ஆயிரம் ஊழியர்களை சென்னை மாநகராட்சி களம் இறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.