தாம்பரம், அக்.1: தாம்பரத்தில் ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, 5 பேர் போலீசில் சரணடைந்தனர். தாம்பரம் சானடோரியம், துர்கா நகர் பிரதான சாலை, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத் (எ) ஆத்தா வினோத் (26), ஷேர் ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் இரவு பல்லாவரம் அருகே நாகல்கேணி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு ஆட்டோவில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் வினோத்தை ஆட்டோவில் கடத்திச் சென்று முடிச்சூர் சாலை விஜிஎன் காலனிக்கு கொண்டு சென்று, அங்குள்ள காலி இடத்தில் வைத்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.
தகவலறிந்த தாம்பரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று வினோத் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தாம்பரம் காவல் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்து இறங்கிய 5 பேர், வினோத்தை கொலை செய்ததாக கூறி சரணடைந்தனர். விசாரணையில், பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (எ) லட்டு ராஜேஷ் (26), இரும்புலியூர் பகுதியை சேர்ந்த பிரேம் (எ) கொக்கி குமார் (26), பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் (27), ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (24), முடிச்சூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (24) என்பது தெரியவந்தது. ராஜேஷ் மற்றும் வினோத் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.