தண்டையார்பேட்டை ஆக.5: ஆந்திர மாநிலம் சிகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நீலகண்டன் (38) மற்றும் காரி நரேஷ் (27). இவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த அலெக்ஸ் (41) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், கடலில் மீன் பிடிக்க சென்ற போது, போதையில் நீலகண்டனுக்கும், காரி நரேசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அலெக்ஸ், இனிமேல் மது போதையில் வேலைக்கு வராதீர்கள், என்று அனுப்பி உள்ளார்.
நேற்று முன்தினம் போதையில் வந்த நீலகண்டன், காரி நரேசுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார். அப்போது காரி நரேஷ் தள்ளிவிட்டதில் நீலகண்டன் அருகில் இருந்த படகில் மோதி பின் தலையில் அடிபட்டு கடலில் விழுந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிந்து, காரி நரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.