சென்னை, செப்.2: ஐஸ்அவுஸ் பகுதியில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் மணலி மனோகரன் மற்றும் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் உட்பட 53 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் வழிபாடு முடிந்து 5ம் நாளான நேற்று முன்தினம் சென்னையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 2054 சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. அதன்படி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு நேற்று முன்தினம் மாலை கொண்டு செல்லப்பட்டது.
கடந்த 1997ம் ஆண்டு முதல் மசூதி அமைந்துள்ள ஜாம் பஜார் காவல் நிலையத்தில் இருந்து ரத்னா கபே சந்திப்பு வரை ஊர்வலத்திற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசாரின் தடையை மீறி இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகரன் மற்றும் சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் உட்பட 53 பேர் தடுப்புகளை தாண்டி விநாயகர் சிலையுடன் செல்ல முயன்றனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதைதொடர்ந்து, தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைய முயன்றதாக இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் மணலி மனோகரன் மற்றும் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் உள்பட 53 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் ஜாம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.