Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விநாயகர் சிலைகள் கரைப்பு எதிரொலி; பட்டினப்பாக்கம் கடற்கரையில் 77 டன் குப்பை கழிவு அகற்றம்: மாநகராட்சி தகவல்

சென்னை, செப்.2: விநாயகர் சிலைகள் கரைப்பு காரணமாக, பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்த 77டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சென்னையை பொருத்தவரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் எல்லையில் 1,519 சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 300க்கும் மேற்பட்ட சிலைகள், ஆவடி மாநகர காவல் எல்லையில் 200க்கும் மேற்பட்ட சிலைகள் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது.

4 நாட்கள் வழிபாடு முடிந்து 5வது நாளான நேற்று முன்தினம், சென்னை முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டது. வழக்கம் போல் விநாயகர் சிலைகளை கரைக்க பெருநகர காவல்துறை பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரம், நீலாங்கரையில் உள்ள பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பகுதியில் உள்ள பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 இடங்களில் அனுமதி வழங்கியது.

அதன்படி இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரதிய சிவசேனா என இந்து அமைப்புகள் சார்பில் சென்னை பெருநகர காவல் எல்லையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,519 சிலைகளை அனுமதிக்கப்ட்ட வழித்தடங்களிலும், தாம்பரம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 4 வழித்தடங்கள், ஆவடி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 5 வழித்தடங்கள் மூலம் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.

இதையடுத்து, அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் அமைக்கப்பட்ட ராட்சத கிரேன் உதவியுடன் அனைத்து சிலைகளும் நீச்சல் தெரிந்த மீனவர்கள், தன்னார்வளர்கள் உதவியுடன் கரைக்கப்பட்டது.

அசம்பாவிதங்களை தவிர்க்க, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், பிரவேஷ்குமார், தலைமையிட கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் தலைமையில் மொத்தம் 16,500 போலீசார் மற்றும் 1500 ஆயிரம் ஊர்காவல் படையினர் என மொத்தம் 18 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணி ேமற்கொண்டனர்.

நேற்று முன்தினம் இரவு 7 மணி நிலவரப்படி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் ஆவடி காவல் எல்ையில் இருந்து வந்த 122 சிலைகள் உட்பட 1,126 சிலைகள், நீலாங்கரையில் உள்ள பல்கலை நகர் கடற்கரையில் 534 சிலைகள், காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரையில் 195 சிலைகள், திருவொற்றியூர பகுதியில் உள்ள பாப்புலர் எடைமேடை பகுதியில் உள்ள கடற்கரையில் 14 சிலைகள் என மொத்தம் 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

இந்நிலையில், பட்டினப்பாக்கம் கடற்கரையில் சிலைகள் கரைக்கப்பட்டதன் எதிரொலியாக குவிந்த 77 டன் குப்பை கழிவுகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றினர். தொடர்ந்து, கரை ஒதுங்கும் மரச்சட்டங்கள் உள்ளிட்ட குப்பை கழிவுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.