மதுரை, ஜூலை 23: அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதில் கோயில் நிர்வாகம் சார்பில் ராக்காயி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் நெய் விளக்கு மற்றும் பிரசாத விற்பனை உள்ளிட்டவைகளின் மூலம் கோயிலுக்கு வருமானம் வருகிறது. இதில் பிரசாத ஸ்டால், முடி காணிக்கை மற்றும் நெய் தீபம் உள்ளிட்ட கட்டணம் தொடர்பான வருவாய்களை அலுவலக கேஷியர் ஜெயராமன் கவனித்து வருகிறார்.
தினமும் விற்பனை வகையில் கிடைக்கும் வசூல் தொகையை கோயில் நிர்வாகத்தின் வங்கி கணக்கில் இவர் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் வசூல் தொகையில் குறிப்பிட்ட தொகையை தன்னுடைய தேவைக்காக எடுத்து பயன்படுத்தி உள்ளார். அந்த தொகையை மறு நாள் வரவு வைத்து ஈடுசெய்துள்ளார். இந்நிலையில் இந்த விஷயம் கோயில் நிர்வாகத்தினர் ஆய்வு செய்த போது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து ஜெயராமனிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.