ஊட்டி, ஜூலை 23: உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு வாகனம் மூலம் முதல் 10 நாட்களுக்கு நீலகிரி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படவுள்ளது.
இந்த வாகனத்தை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், ‘வாருங்கள், செறிவூட்டப்பட்ட அரிசியை பற்றி அறிந்து கொள்வோம்” என்ற வாசகங்கள் பொருத்தப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்ட குறும்படத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட உணவு பாதுகாப்பு (ம) மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ராகவன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.