சோழிங்கநல்லூர்: ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 5வது நடைமேடையில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பினாங்கினி அதிவிரைவு ரயிலில் இருந்து இறங்கிய இருவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அப்போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து, போலீசார் பையை சோதனை செய்தபோது கஞ்சா பார்சல் சிக்கியது.
இதையடுத்து, போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், சிவகங்கை மாவட்டம் நேரு பஜார் பகுதியை சேர்ந்த விஷ்ணு வரதன்(23), திருப்புவனம் தாலுகாவை சேர்ந்த ஹேம்நாத் பாபு(22) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும், 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.