அரியலூர், அக்.31: அரியலூர் மாவட்டம் காத்தான்குடிக்காட்டில் உள்ள அண்ணாபல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 50 பேரிடம் 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம், விளாங்குடி அடுத்த காத்தான்குடிக்காடு கிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு, தன்னார்வலர்களான மாணவ, மாணவியர், பேராசிரியர், பணியாளர்கள் என 300 பேரிடம் ரத்தவகை பரிசோதித்து, அவர்களில் 50 பேரிடம் இருந்து 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, அக்கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆதிலட்சுமி செய்திருந்தார்.
 
  
  
  
   
