தா.பழூர், ஆக. 30: அரியலூர் மாவட்டம் தா. பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், வழிபாடு செய்யப்பட்ட 35 விநாயகர் சிலைகள் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தா.பழூர், தலைப்புடன் சிலால், கோடங்குடி, சிந்தாமணி, காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, மதனத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுவது வழக்கம். பின்னர், தா பழூர் வரை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அனைத்து சிலைகளும் ஊர்வலமாக எடுக்கப்பட்டு மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் விஜர்சனம் செய்யப்படுவது வழக்கம்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி சார்பில் செய்யப்பட்டிருந்தது. இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் வெற்றிச்செல்வன் வரவேற்று பேசினார். திருச்சி கோட்ட இந்து முன்னணி இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் இளையராஜா சிறப்புரை ஆற்றி கொடி அசைத்து விநாயகர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. தா பழூர் கடைவீதி, காரைக்குறிச்சி மதனத்தூர் ஆகிய கிராமங்கள் வழியாக ஊர்வலம் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று அங்கு அனைத்து சிலைகளும் விஜர்சனம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.