தா.பழூர், ஆக. 30: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு காய்கறி பயிர்களில் விதை நேர்த்தி குறித்த தொழில்நுட்பம் ஆலோசனைகளை வழங்கினர். இதுகுறித்து, கிரீடு வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன் கூறுகையில், டிஎன்ஏயூ விதை அமிர்தத்தை, 200 மிலி திரவத்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து, விதைகளை அதில் 10-15 நிமிடங்கள் நனைத்து, பின்னர் நிழலில் உலர்த்தி, நேரடியாக விதைக்கலாம்.
இந்த சிகிச்சை, விதையின் வீரியத்தை அதிகரித்து, முளைப்புத்திறனைத் துரிதப்படுத்தி, பூஞ்சாணத் தாக்குதலிலிருந்து பாதுகாத்து, நல்ல மகசூலைத் தரும். இது, நீர் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும் ஒரு பாலிமர் திரவத்துடன், முளைப்புத்திறன் மற்றும் வேர்வளர்ச்சியை அதிகரிக்கும் வேதிப்பொருட்களைக் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு திரவப் பொருளாகும். முதலில் 200 மிலி டிஎன்ஏயூ விதை அமிர்தத்தை ஒரு லிட்டர் நீரில் கலக்கவும்.
இந்தக் கலவையில் விதைகளை 10-15 நிமிடங்கள் நனைக்க வேண்டும். நனைத்த விதைகளை நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர், விதைகளை நேரடியாக விதைக்கலாம். இதனால், விதை முளைப்புத்திறனை அதிகப்படுத்துகிறது. வேர் வளர்ச்சியில் வேகம் அதிகரிக்கிறது. விதைகளை பூஞ்சாணத் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது.
இப்படி செய்வதன் மூலம் நல்ல மகசூல் பெற உதவுகிறது. விதைகளின் வீரியத்தை ஊக்குவிக்கிறது. மேலும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு காய்கறி சாகுபடி விவசாயிகள் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின் 9786379600 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என என கிரீடு வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன் தெரிவித்துள்ளார்.