ஜெயங்கொண்டம், ஆக.29: அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் மக்காச்சோள விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுவதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் வேளாண் துறையின் மூலம் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல் விளக்கத்திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதைகள், உயிர் உரங்கள், இயற்கை உரங்கள், நானோ யூரியா ஆகிய இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.
அரியலூர் வட்டார வேளாண் விரிவாக்க மைய கிடங்கில் பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு 1,000 எக்டேருக்கும், ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு 250 எக்டேருக்கும், தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் தங்களது நில உடைமை சான்று, சிட்டா, ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து மானிய விலையில் இடுபொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி தெரிவித்துள்ளார்.