அரியலூர், ஆக.29: அரியலூர் நகர் மன்றத்தில் நேற்று நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரியலூர் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கலியமூர்த்தி, ஆணையர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலாளா் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் வெள்ளத்துரை மற்றும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பாதாள ச்சாக்கடை பழுது நீக்கம், பாதாள சாக்கடை உந்து நிலைய மோட்டார் பழுது நீக்கம், சுதந்திர தினத்தையொட்டி விளையாட்டு அரங்கில் பந்தல் அமைப்பு உள்ளிட்ட செலவினங்கள், வாரச்சந்தை, ஏரிகள் குத்தகை விட்டது குறித்த 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள், ஒவ்வொரு கூட்டத்தின் போதும், எங்கள் பகுதியில் உள்ள சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைக்கிறோம். ஆனால், அதனை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. இதுகுறித்து மக்களிடம் எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே, எங்களது கோரிக்கைகள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.