ஜெயங்கொண்டம், நவ.22: அரியலூர் அருகே ரூ.50 லட்சம் மதிப்பிலான 110 கிலோ வெண் பாதரசத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே விருத்தாச்சலம் செல்லும் சாலையில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கேரள மாநிலப் பதிவெண் கொண்ட வெள்ளை நிறக்கார் ஒன்று நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த போலீசார் ரகசியமாக சென்று கண்காணித்தனர். இதில் காருக்குள் சந்தேகம்படும்படியான 5 நபர்கள் இருந்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், காரை சோதனை செய்தபோது அதில் 110 கிலோ வெண் பாதரசம் இருந்தது தெரிய வந்துள்ளது.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இது நகை பாலிஷ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வெண் பாதரசம் என்றும், அதில் இது போலியானதும், இதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் காரில் இருந்த 5 பேரிடம் விசாரணை செய்ததுடன், சம்பந்தப்பட்ட வாகனத்தையும், வெண் பாதரசத்தையும் பறிமுதல் செய்தனர்.

