அரியலூர், நவ.21: அரியலூர் மாவட்டத்தில் கல்வி பயின்றுவரும் அனைத்து மாணவர்களுக்கும் வருகிற 27ம் தேதி கல்வி கடன் மேளா சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அரியலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்தவகளுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும்,
12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாமாண்டு முதல் நான்காமாண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் கல்வி கடன் மேளா சிறப்பு முகாம் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில், அரியலூர் மாவட்ட நிர்வாகமும், அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் இணைந்து அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 27.11.2025 அன்று முற்பகல் 10.00 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
மேலும், கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு முகாமில் கலந்து கொள்வது கல்வி கடன் பரிசீலினையை எளிமையாக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் மேற்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


