அரியலூர், ஆக.21: பொறியியல் படிப்பினை தேர்ந்தெடுத்துள்ள மாணவர்கள், சிந்தனைத் திறன்களை வளர்த்துக் கொண்டு, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றார் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி. அரியலூர் அடுத்த விளாங்குடி அருகே காத்தன்குடிகிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நேற்று முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி பேசுகையில்,மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் கற்றாலும் பொறியியலில் சிறந்து விளங்குவதற்கு அது ஒரு தடை இல்லை.
பொறியியல் பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுத்துள்ள மாணவர்கள் புதுமையான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் புது தொழில் நுட்பங்களையும், புது கண்டுபிடிப்புகளையும் உருவாக்க வேண்டும் .அதுவே தற்போதைய தொழில்நுட்ப உலகில், சிறந்த வேலைவாய்ப்பினை பெற்றுத் தரும். எனவே தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தினை அனைத்து மாணவர்களும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.
மேலும், அக்கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்து பேசுகையில், முதலாமாண்டில் சேர்ந்த மாணவ, மாணவிகள் அடுத்த நான்காண்டுகள், விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் உழைத்தால் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறமுடியும் என்றார். முன்னதாக துறை தலைவர் மார்கபந்து வரவேற்றார். அனைத்து துறைகளின் கல்விசார் ஒருங்கிணைப்பாளர் ராஜாகுமார் நன்றி கூறினார்.