அரியலூர், நவ. 19: அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஒருநாள் விடுப்பெடுத்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீத பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். இடைநிலை, முதுகலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற் கல்வி இயக்குநருக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வேல்முருகன், செயலர் ஷேக்தாவூத், வருவாய் துறை அலுவலர் சரவணன், செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்க நிர்வாகி ராகவன், சாலை பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலர் அம்பேத்கர், மருந்தாளுநர் சங்க நிர்வாகி வசந்தா, ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்டச் செயலர் மகாலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.


