ஜெயங்கொண்டம், செப்.19: திருமானூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ேமலாண்மை குறித்த பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்றனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் காரைப்பாக்கம் மற்றும் அன்னிமங்கலம் கிராமங்களில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
கிரிடு வேளாண் அறிவியல் மையர் தொழில்நுட்ப வல்லுனர் திருமலை வாசன் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மண்வளத்தை மேம்படுத்த மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் செயற்கை உரங்களை குறைந்த அளவில் பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் ரசாயன உரங்களில் உள்ள உப்புக்கள் படிதல் அளவினை குறைக்க இயலும் என்பதையும், மண் இறுக்கமடைதலையும் தவிர்க்க இயலும் என கூறினார்.
மண் வளத்தை மேம்படுத்த உதவும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை பெருக்க தொழு உரம் இடுதல், பசுந்தாள் உர பயிர்களை பயிரிடுதல் மற்றும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்துதலின் அவசியம் குறித்து கூறினார், மேலும் விவசாயிகள் அதிக அளவில் யூரியா மற்றும் டிஏபி உரங்களை அடி உரமாக இடுவதை காட்டிலும் நானோ உரங்களாக இலை வழி தெளிப்பு செய்வதன் மூலம் உர பயன்பாட்டு திறன் அதிகரிக்கும் என விளக்கினார்.
நெல் வயல்களில் பொதுவாக தோன்றும் பாசிகளை ஏக்கருக்கு 250மி.லி பாஸ்பரஸ் கரைக்கும் பாக்டீரியாவை எருவில் கலந்து 15 நாள் இடைவெளியில் வயலில் இட்டு கட்டுப்படுத்தலாம் என்று கூறினார். மேலும் ஏக்கருக்கு 5 கிலோ விதம் நுண்சத்து உரங்களை இடுவதன் மூலம் நுண்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் மகசூல் குறைப்பை தவிர்க்கலாம் எனவும் கூறினார். இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் கலைமதி மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.