சம்பா நெல் பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை
ஜெயங்கொண்டம், நவ.18: ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் தற்போது சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றங்களுக்கேற்ப பூச்சி, நோய் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. இலை நுனியில் பழுப்பு நிற முட்டைக் குவியல் மற்றும் தூர்களில் நடுப்பகுதி காய்ந்திருத்தல் மற்றும் நடுத்தண்டை இழுத்தால் எளிதாக வெளியில் வருதல் ஆகியவை தண்டு துளைப்பான் தாக்குதலின் அறிகுறியாகும். இதனைக் கட்டுப்படுத்த, வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 5 சத வேப்பங்கொட்டைசாறு அல்லது 400 மிலி அசாடிராக்டின் அல்லது ஏக்கருக்கு 400 கிராம் கார்டாப்ஹைட்ரோகுளோரைடு தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும், பயிரில் தோன்றும் இலைசுருட்டுப்புழுவானது இலையை நீளவாக்கில் மடித்து இலையின் உள்ளே காணப்படும். இப்புழுவானது இலையைச் சுரண்டி உண்பதால் இலைகள் வெளிறி பின் காய்ந்து விடும்.
தீவிரமான தாக்குதலின்போது பயிர் இலை முழுவதுமாக பச்சையமின்றி காய்ந்து காணப்படும். இலைசுருட்டுப்புழுவைக் கட்டுப்படுத்த 5 சத வேப்பங்கொட்டைசாறு அல்லது 400 மிலி அசாடிராக்டின் அல்லது ஏக்கருக்கு 400 மிலி புரபனோபாஸ் இவற்றில் ஏதாவது ஒன்றைத் தெளித்து கட்டுப்படுத்தலாம். பொதுவாக இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்த தழைச்சத்து அடங்கிய உரங்களை அதிக அளவு இடுவதைத் தவிர்க்க வேண்டும். நெற்பயிரில் தோன்றும் குலைநோயானது பயிரின் அனைத்துப் பருவங்களிலும் ஏற்பட்டு அதிக பொருளாதார சேதத்தினை ஏற்படுத்துகிறது. இது குலைநோய் என அழைக்கப்படுகிறது. இதனை ஏக்கருக்கு 400 கிராம் டிரைசைக்ளோசோல் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
நெல் மற்றும் நிலக்கடலை பயிர்களில் தோன்றும் இலைப்புள்ளி மற்றும் வேரழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த உதவும் சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகிய உயிரியல் காரணிகள் வேளாண் விரிவாக்க மையக்கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் பயன்படுத்தி பயனடையலாம் என ஜெயங்கொண்டம் வட்டார வேளாண் உதவி இயக்குநர்(பொ) மகேந்திரவர்மன்; விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


