பெரம்பலூர்,நவ.18: தொற்றாநோய் களப் பணிகளை மட்டும் செய்திட உதவிடவேண்டும் என பெரம்பலூர் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் குறை தீர்க்கும் நாள் கூட்டஅரங்கில் நேற்று திங்கட் கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர்கள் அதன் நிதி பொறுப்பாளர் செல்வி தலைமையில் 25 பேர் திரண்டு வந்து அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது; பெரம்பலூர் மாவட்டத்தில் தொற்றாநோய் களப் பணியில் பெண் சுகாதார பணியாளர்களாக 95 களப்பணியாளர்கள் பணி புரிந்து வருகிறோம்.
எங்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ5,500 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இரண்டுமணி நேர பணிதான் என்று கூறி எங்களை பணியில் சேர்த்து விட்டு இப்போது முழுநேரப் பணியாளர்களைப் போல் வேலைவாங்கி வருகின்றனர். இதில், உயர் அதிகாரிகளின் மிரட்டலுக்கும் நாங்கள் ஆளாகி வருகிறோம். எனவே, எங்களுக்கு வழங்கிய தொற்றா நோய் பணிகளை மட்டும் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் செவ்வனே செய்திட உதவிட வேண்டும் என அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.


