அரியலூர், செப். 17: அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இலவச தையல் இயந்திரம், தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்க வேண்டும். தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியத்துக்கு தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும். தையல் தொழிலாளர்களுக்கு மாநில அளவில் முத்தரப்புக்குழு அமைக்கவேண்டும்.
கட்டுமான நல வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கும் கல்வி, வீடு கட்ட நிதி உதவி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் தையல் நலவாரிய தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் உயர்த்தி வழங்கவேண்டும். தையல் கடை, கூட்டுறவு தையல் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவேண்டும்.
கூட்டுறவு தையல் அனைத்து உறுப்பினர்களுக்கும் துணி வழங்கி, கூலி உயர்வு, அடையாள அட்டை, லக்கேஜ் கட்டணம், தீபாவளி போனஸ், பி.எப். இஎஸ்ஐ போன்ற திட்டங்களையும் அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சரண்யா தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட தலைவர்கள் துரைசாமி, சகுந்தலா, துணைத் தலைவர்கள் சிற்றம்பலம், சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தையல் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.