அரியலூர், செப். 17: அரியலூர் அண்ணாசிலை அருகே அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயப்பாட மொழியாக்க வலியுறுத்தி தமிழ் வழிக் கல்வி இயக்கத்தினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் வழியில் கற்றவர்களுக்கே தமிழ்நாட்டில் வேலை வழங்க வேண்டும். மழலையர் கல்வியில், அங்கன்வாடிக் கூடங்களில் தாய்மொழி தமிழில் மட்டுமே கற்பித்தல்முறையை கட்டாயமாக்க வேண்டும்.
இதேபோல் அனைத்து தொடக்க நிலைப் பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். அரசுப்பள்ளி தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலை வாய்ப்புகளில் 60 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தொல்லாய்வுப் பேரறிஞர் விக்டர் தலைமை வகித்தார். தமிழ்பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி. பாலகிருஷ்ணன், ஆசிரியர் நல்லப்பன், கவிஞர் அறிவுமழை, ஈகவரசன், அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
தமிழ் வழிக்கல்வி இயக்கத் தலைவர் சின்னப்பத்தமிழர், பொதுச்செயலர் தேனரசன், பொருளாளர் மணிசேகரன், செந்தமிழர் எழுச்சி நடுவம் நிர்வாகி செந்தமிழ்வேந்த் தொடக்கவுரையாற்றினார். அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்தியச் செயலர் அண்ணாமலை, தமிழர் நீதிக் கட்சித் தலைவர் சுபா.இளவரசன் சிறப்புரையாற்றினர். நிறைவில் தமிழ்களம் இளவரசன் நன்றி கூறினார்.