அரியலூர், அக்.13: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். தா.பழூர் அடுத்த கார்குடி கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் கிடா(எ)ராஜ்குமார்(30). கஞ்சா விற்பனை, திருட்டு மற்றும் அடித்தடி உள்ளிட்ட குற்ற வழக்கில் தொடர்புடைய இவரை, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு காவல் துறையினர் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ராஜ்குமார் வெளியே வந்தால் மேலும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி பரிந்துரை பேரில், ராஜ்குமாரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேற்று உத்தரவிட்டார். இதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் வழங்கினர்.