ஜெயங்கொண்டம், செப்.13: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளின் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உதவித்தலைமை ஆசிரியர் இங்கர்சால் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேப்பெருமாள் முன்னிலை வகித்தார். ஆசிரியர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திருச்சி ஐடிஎப்சி முதன்மை பாரத் வங்கி பொது மேலாளர் சிவசண்முக ராஜேஸ்வரன் கலந்துகொண்டு, பெண் குழந்தை கற்றல் திறன், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி 2024-202 ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவி சந்தியாவிற்கு உயர்கல்வி பயில்வதற்கு ரூ.5ஆயிரம் உதவித்தொகை வழங்கினார்.
மேலும் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த 30 மாணவிகளுக்கு பேனா வழங்கி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவிகளையும் பள்ளி 100% தேர்ச்சி பெற்றதையும் பாராட்டி வாழ்த்தினார். நிகழ்வில், வங்கி பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் வனிதா, சாந்தி அமுதா, பூசுந்தரி, தமிழரசி, பாவைசங்கர், அருட்செல்வி, மாரியம்மாள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராஜசேகரன் நன்றி கூறினார்.