அரியலூர், செப்.12: அரியலூர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரை அரசுப் பணி செய்ய விடாமல் திட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம், வெங்கனூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை மறித்து சோதனை செய்தபோது இருவரும் மதுபோதையில் இருந்தது தெரிந்தது.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த உதயகுமார் மகன் நவீன் (24) மற்றும் அரியலூர் மாவட்டம் இலந்தைக்கூடம் கிராமம் மருதை நகரைச் சேர்ந்த ஆனந்த் மகன் லோகேஷ் (28) ஆகிய இருவரும் மது போதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் இருவர் மீதும் வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.