அரியலூர், அக். 8: அரியலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க பலர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளனர். தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரின் அனுமதி பெற்ற பிறகே தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் நடத்த முடியும். (நிரந்தர பட்டாசு கடை உரிமையாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்வார்கள்).
முன்னதாகவே தீயணைப்புத் துறையினர் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். தற்காலிகப் பட்டாசு கடை அமைந்துள்ள கட்டடத்தின் அமைப்பு, கடையின் உள்கட்டமைப்பு மற்றும் மேற்கூரை அமைப்பு, போதுமான இட வசதி, தீ விபத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.வெளியே செல்ல இருவழி இருத்தல் போன்ற முக்கியமான வசதிகளை, காவல்துறையினர் சோதனை செய்த பின்னரே தற்காலிக கடைக்கு தடையில்லாச் சான்று வழங்கி அனுமதி வழங்கப்படும்.
எனவே தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர்கள் முறையான பாதுகாப்புடன் கூடிய உள்கட்டமைப்புகளை 10.10.2025 அன்றுக்குள் அமைத்திருக்க வேண்டும். விதிகளை பின்பற்றாத, உரிய உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தாத, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாத கடைகளுக்கு தடையில்லா சான்றிதழ் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.