அரியலூர், நவ. 7: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே, அரியலூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையினையொட்டி ரூ.3 கோடி மதிப்பில் மொழிப்போர் தியாகி சின்னசாமி பெயரில் தமிழக அரசு மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரங்கம் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு 300 நபர்கள் அமரும் வகையில் அரங்கம், 100 நபர்கள் உணவருந்தும் வகையில் கூடம் மற்றும் சமையல் கூடம் ஆகியவை கொண்டுள்ளது. மேலும், மணமகன், மணமகள் அறைகள், கழிவறைகள், காற்றோட்டத்துக்கு பெரிய அளவிலான ஜன்னல்கள், குடிநீர் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்கம் முன்பும், பக்க வாட்டிலும் வாகனங்கள் நிறுத்த தாராளமாக காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரங்கைசுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுபமுகூர்த்த நிகழ்வுகள், சிறு, சிறு கட்சி கூட்டங்கள், அமைப்புகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்த குறைந்த வாடகைக்கு இந்த அரங்கம் விடப்படவுள்ளது. தற்போது அரங்கத்தில் 90 சதவீத வேலைகள் நிறைவடைந்துள்ளன. அரங்கம் முன்பு தரைதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.விரைவில் இந்த அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. திறப்புக்கு பிறகு முன்பதிவு செய்ய பொதுமக்கள் 9498042421 என்ற எண்ணை அணுகலாம் என அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
