தா.பழூர், நவ. 6: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் எனும் பழங்குடியினப் பெருமை தினத்தையொட்டி, பழங்குடியின மக்களுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பு கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு 1.11.2025 முதல் 15.11.2025 வரை இந்த பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியானது 1.11.2025 முதல் 5.11.2025 வரை இருகையூர், காக்கா பாளையம், துளாரங்குறிச்சி மற்றும் வாணதிரையன்பட்டினம் ஆகிய கிராமங்களில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் குறித்தும் அவர் பழங்குடியின சமூகத்தின் மேம்பாட்டிற்காக போராடியவை குறித்தும் பழங்குடியினத்தினரிடன் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் அழகு கண்ணன் எடுத்துக் கூறினார்.
மேலும், தொழில்முனைவோருக்கான வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிகளை மைய தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா, ராஜா ஜோஸ்லின், அசோக் குமார், திருமலைவாசன், ஷோபனா மற்றும் சரண்யா ஆகியோர் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நவம்பர் 15 தேதி வரை அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடத்தபட உள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
