ஜெயங்கொண்டம், நவ.5:அரியலூர் மாவட்டத்தில் வேளாண் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்த போது குறைபாடுகள் கண்டறியப்பட்ட 8 தனியார் உரக்கடைகளுக்க விற்பனை தடை விதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் வேளாண்மை இணை இயக்குனர் பாபு அறிவிப்பின் படி வேளாண்மை உதவி இயக்குனர் தரகட்டுப்பாடு ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் படி அரியலூர் மாவட்டத்தில் தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தர்மபுரி மாவட்ட உர கண்காணிப்பு குழு இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தர்மபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு சங்கரி தலைமையில் நடைபெற்றது. இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், செந்துறை ஜெயங்கொண்டம், தா. பழூர், ஆண்டிமடம், திருமானூர் ஆகிய வட்டாரத்தில் உள்ள தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உர கண்காணிப்பு குழு திடீர் ஆய்வு மேற்கொண்டு உரம் இருப்பு விவரம், உர உரிமம், உரம் இருப்பு பதிவேடு, விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்வது குறுத்து ஆய்வு செய்தனர்.
உரங்கள் தினசரி பலகையில் பதிவேற்றம் செய்தல் உர குடோன்களில் உரங்கள் இருப்பு விவரம் மற்றும் மூட்டைகள் சரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதா போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியப்பட்ட 8 உரக்கடைகளுக்கு விற்பனை தடை ஆணை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
