Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிதம்பரம் (தனி) மக்களவை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அமோக வெற்றி

அரியலூர், ஜூன் 5: திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் (தனி) மக்களவை தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி த்தலைவரும் வேட்பாளருமான திருமாவளவன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட 1,03,554 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிப்பெற்றார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதிமுக சார்பில் சந்திரகாசன், பாஜக சார்பில் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜான்சிராணி உட்பட 14 பேர் போட்டியிட்டனர்.

சிதம்பரம் தொகுதியில் பதிவான வாக்குகள் வாக்குகள் எண்ணும் மையமான அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி கலை அறிவியல் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில், அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில், முதல் சுற்றிலிருந்தே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முன்னிலை வகித்து வந்தார். இதனால் காலை முதலே வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தி வந்தனர். ஒவ்வொரு சுற்றிலும் கூடுதல் வாக்குகளை பெற்று வந்த திருமாவளவன், அனைத்து சுற்றுகள் முடிந்த நிலையில், 1,03,554 வாக்குகள் பெற்று திருமாவளவன் வெற்றிப்பெற்றதாக கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்தார்.

அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 4,01,530 வாக்குகள் பெற்று 2-வது இடத்தையும், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 1,68,493 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி 65,589 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தனர். 10 சுயேச்சை வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி நோட்டா 8,761 வாக்குகள் பெற்றது.

இதையடுத்து திருமாவளவனுக்கு வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார். அப்போது, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், திமுகவினர் உடனிருந்தார். திருமாவளவன் வெற்றிப்பெற்றதையடுத்து, வாக்கு எண்ணும் மையத்துக்கு நேற்று இரவு வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், திருமாவளவனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.