ஜெயங்கொண்டம், ஜூலை 30: ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தில் அய்யனார் கோயில் தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஜெயங்கொண்டம் அருகில் உள்ள புது குடிய கிராமத்தில் உள்ள பால விநாயகர், பாலமுருகன், பூர்ண புஷ்கலாம்பிகை உடனுறை அய்யனார், அக்னி வீரன், ஆகாச கருப்பு, பிடாரியம்மன், மகா மாரியம்மன், சப்த மாதாக்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கான தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது.
தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 16ம் தேதி கொடியேற்றம் மற்றும் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தினசரி ஒவ்வொரு நாளும் காளை, குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அய்யனார் சாமியின் வீதி உலா நடைபெற்றது. நேற்று காலை 11 மணியளவில் தேர் வீதி உலா வடம் பிடித்தல் நடைபெற்றது. இன்று காலை 10 மணி அளவில் காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் 31ம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை புதுக்குடி ஊர் நாட்டாண்மைகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.