Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

போதையில்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பணி பொன்பரப்பி அரசு பள்ளிக்கு முதல்பரிசு

அரியலூர் ஆக.1: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், போதையில்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேற்று வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதனால் உண்டாகும் தீமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்க பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவின் மூலம் போதையில்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வை சிறப்பாக மேற்கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.15,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழும்,

இரண்டாமிடம் பெற்ற அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.10,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழும், மூன்றாமிடம் பெற்ற வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.5,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் ரத்தினசாமி வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) பாலசுப்ரமணியம், மற்றும் இதர அரசு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.