அரியலூர், டிச. 11: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா நேற்று நடைபெற்றது.
இதில் அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சித்ரா குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து பேசியதாவது,
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாமல் அந்நாட்டின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டும் கூட அவசியம். எனவே நமது கலை மற்றும் பாரம்பரிய பண்பாடுகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சமூகத்தின் தேவையாக உள்ளது. அந்த வகையில், மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டு அதன் மூலம் கலை, கலாச்சாரங்களை பாதுகாக்க முன் வரவேண்டும் என்றார். ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொ) ராசமூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் கல்வியுடன் நமது கலாச்சாரங்களையம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கவிதை, கட்டுரை, கதை எழுதுதல், நாட்டுப் புற நடனம், பாடல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் கருணாகரன், பன்னீர்செல்வம், மேரி வைலட் கிறிஸ்டி ஆகியோர் செய்திருந்தனர்.


